×

நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் அம்மனுக்கு இன்று வளைகாப்பு வைபவம்

நெல்லை, ஜூலை 15: நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம், இன்று காலையில் நடக்கிறது. இதில் திரளான பெண்கள் குழந்தைவரம், திருமண பாக்கியம் வேண்டி அம்மனுக்கு வளையல்களை காணிக்கையாக வழங்குகின்றனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆனித்தேரோட்ட திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் புகழ் பெற்றதாகும். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் ரதவீதி வலமும் நடக்கிறது.

4ம் திருவிழாவான இன்று காலையில் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. இதில் குழந்தை பாக்கியம், திருமணம் நடைபெற வேண்டி பெண்கள் அம்மனுக்கு விதவிதமான வளையல்களை காணிக்கையாக வழங்குவர். வளைகாப்பு வைபவ சிறப்பு அலங்கார தீபாராதனை முடிந்து பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் பிரசாதமாக வழங்கப்படும். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் ரதவீதி வலம் நடக்கிறது.

ஆடிப்பூரம் 10ம் திருநாளான வரும் 21ம் இரவு 6.30 மணி முதல் 8 மணிக்குள் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசையுடன் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
இதில் பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி நவதானியங்கள், பலகாரங்களை கொண்டு அம்மன் மடிநிரப்பி சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

The post நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் அம்மனுக்கு இன்று வளைகாப்பு வைபவம் appeared first on Dinakaran.

Tags : Nellaiappar temple Aadipura festival ,Amman ,Nellai ,Gandhimati Ambal ,Nellaiappar Temple Adipur festival ,Mother's Baby Shower ,
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...